Last Updated:
சீத்தலா மாதா கோயிலில் சிறப்பு வழிபாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் நாளந்தா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பக்தர்கள் கூடியதால் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன?
சீத்தலா மாதா கோயிலில் சாமி தரிசனம் செய்ய ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் முண்டியடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் இல்லாததாலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படாததாலும் அசம்பாவிதம் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அலட்சியம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் சீத்தலா மாதா கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் செவ்வாய்க்கிழமைதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் சித்திரை மாதத்தின் கடைசி செவ்வாய் என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அலைமோதியுள்ளது. அதை சற்றும் எதிர்பார்க்காத கோயில் நிர்வாகிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறியுள்ளனர்.
தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்ததால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் முண்டியடித்துள்ளனர். ஒரு சிலர் வரிசையில் நிற்காமல் முந்திச் செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் உள்ளே சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்ட நெரிசலில் சிக்கி வயதான பெண்கள் சிலர் தடுமாறி விழுந்துள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்துச் சென்றுள்ளனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் மயங்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இருந்தபோதும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர்கள் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக கூட்டம் கூடியதும் அதை முறைப்படுத்த கோயில் நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் அசம்பாவிதம் நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீத்தலா மாதா கோயிலில் சிறப்பு வழிபாட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர்கள் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீத்தலா மாதா கோயிலில் தரிசனம் செய்ய முண்டியடித்த பக்தர்கள்… நெரிசலில் சிக்கி உயிரிழந்த 8 பெண்கள்…


