புத்ராஜெயா | மார்ச் 31, 2026
மலேசியாவில் உணவு விநியோகம், பார்சல் சேவை மற்றும் இ-ஹெய்லிங் (e-hailing) போன்ற துறைகளில் பணியாற்றும் சுமார் 16.4 லட்சம் கிக் தொழிலாளர்களுக்கு (Gig Workers) சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் புதிய சட்டம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்தது. இதன் மூலம், ஆசியாவிலேயே கிக் தொழிலாளர்களுக்கெனத் தனித்துவமான சட்டத்தைக் கொண்டு வந்த முதல் நாடுகளில் ஒன்றாக மலேசியா திகழ்கிறது.
அனைத்து கிக் தொழிலாளர்களுக்கும் பெர்கேசோ (Perkeso) மூலம் சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு உறுதி செய்யப்படும் என்றும், சேவை ஒப்பந்தங்கள் (Service Agreements) மற்றும் வருமான விகிதங்களில் (Income Rates) வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் இந்த சட்டம் தொழிலாளர்கள் மத்தியில் எந்தவிதமான பாகுபாடும் காட்டப்படுவதைத் தடை செய்கிறது.
அத்தோடு தொழிலாளர் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க ‘கிக் தொழிலாளர் தீர்ப்பாயம்’ (Gig Workers Tribunal) அமைக்கப்படும்.
கிக் தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையான குறைந்தபட்ச வருமான விகிதம் குறித்து ஆலோசிக்க ‘கிக் ஆலோசனைக் குழு’ (MPGig) அமைக்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 1 முதல் இக்குழுவின் நியமனங்கள் தொடங்கும் என்றும், ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் முதல் கூட்டத்திலேயே தொழிலாளர்களின் வருமான விகிதம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரமணன், “இச்சட்டம் மலேசியக் குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை (PR) பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்; வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பொருந்தாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தச் சட்டம் தொழிலாளர்களின் தற்போதைய ‘நெகிழ்வான வேலை நேரத்தை’ (Flexible working hours) எவ்விதத்திலும் பாதிக்காது என்றும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.




