Last Updated:
ஒரு கட்டத்தில் சென்னை அணி 57 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மிகக் குறைந்த ஸ்கோரில் சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சென்னை அணி தடுமாறி 127 ரன்கள் சேர்த்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடும் சவாலாக அமைந்தனர்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் தலா 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் பவர் பிளே முடிவதற்குள்ளேயே முக்கியமான விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி தடுமாறியது.
ஆயுஷ் மாத்ரே ரன் ஏதும் எடுக்காமலும், மேத்யூ ஷார்ட் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்த நிலையில், மிடில் ஆர்டரில் வந்த சர்ஃபராஸ் கான் 17 ரன்களும், சிவம் துபே 6 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் ஒரு கட்டத்தில் சென்னை அணி 57 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மிகக் குறைந்த ஸ்கோரில் சுருண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், கீழ் வரிசையில் விளையாடிய ஜேமி ஓவர்டன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 100-ஐத் தாண்ட உதவினார். கார்த்திக் சர்மா தன் பங்கிற்கு 15 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்தார்.


