Last Updated:
ஆந்திராவில் முறை தவறிய உறவில் இருந்த கடற்படை டெக்னீசியன் கொலைபாதக செயலில் ஈடுபட்டதன் பகீர் பின்னணி என்ன?
ஆந்திராவில் இளம்பெண்ணைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைத்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. முறை தவறிய உறவில் இருந்த கடற்படை டெக்னீசியன் கொலைபாதக செயலில் ஈடுபட்டதன் பகீர் பின்னணி என்ன?
ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் ராஜம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரா. 35 வயதான இவர், கடற்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். பணி நிமித்தமாக விசாகப்பட்டினத்தில் உள்ள வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு ரவீந்திராவின் மனைவி, அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து ரவீந்திரா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் ரத்தக் கறையுடன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்ததாக கூறி சரண் அடைந்துள்ளார். தொடர்ந்து, உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதாக கூறி காவல் நிலையத்தில் இருந்தவர்களை கதிகலங்க வைத்துள்ளார். விசாரணையில் 29 வயதான மவுனிகா என்ற பெண்ணுடன் ரவீந்திரா முறை தவறிய உறவில் இருந்தது தெரியவந்தது.
இந்த சூழலில் மனைவி ஊருக்கு சென்றதால், ஞாயிறு பிற்பகலில் தனது வீட்டிற்கு மவுனிகாவை அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ஆத்திரத்தில் கூர்மையான ஆயுதத்தை எடுத்து மவுனிகாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல் தலையை துண்டித்து எடுத்ததாக கூறி போலீசாரையே மிரள வைத்துள்ளார்.
பின்னர், இடுப்புக்கு மேல் பகுதியை பல துண்டுகளாக வெட்டி வீட்டில் இருந்த ரெப்ரிஜிரேட்டரில் அடைத்து வைத்துள்ளார். இடுப்புக்கு கீழ் பகுதி மற்றும் தலையை சாக்குப் பையில் கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தூக்கி வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ரவீந்திராவின் வீட்டிற்குச் சென்ற போலீசார், ரெப்ரிஜிரேட்டரில் இருந்து மவுனிகாவின் உடல் பாகங்களை கைப்பற்றினர். மேலும், தலை உட்பட எஞ்சிய உடல் பாகங்களை கண்டுபிடிக்க தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவீந்திராவை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவீந்திராவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்துதான் அவரின் மனைவி, தனது தாயார் வீட்டிற்கு சென்றாரா? பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் ரகசிய காதலியை ரவீந்திரா கொடூரமாக கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


