Last Updated:
பெரம்பூர் தொகுதியில் TVK தலைவர் Vijay வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரம் தொடங்கினார். DMK ஆட்சியை கடுமையாக விமர்சித்து விசில் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு ஆதரவு பெற்றார்.
பெரம்பூரில் பரப்புரையை தொடங்கிய தவெக தலைவர் விஜய், எவ்வளவு பெரிய வசதியான வாய்ப்பு இருந்தாலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தவெக சார்பில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். அதன்படி, இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் போட்டியிடவுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். விஜய்க்கு மாற்று வேட்பாளராக தவெக மாவட்டச் செயலாளர் சிவா மனுத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய தவெக தலைவர் விஜய், பெரம்பூர் பணிமனை அருகே பரப்புரையை ஆரம்பித்தார். அப்போது பேசிய அவர், முதலில் எங்கே இருந்து வேண்டுமானாலும் வரலாம், ஆனால் நம்ம வீட்டு வாசலில் இருந்து தொடங்குவது தானே சிறந்தது. அதன்படிதான் பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன் என கூறினார்.
தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டை காப்பாற்றி ஆகணும். அதற்கு காரணம் தீயசக்தி திமுக தான் காரணம். பாட்டி வயதில் இருப்பவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை இது நாடா இல்ல காடா, ஸ்டாலின் சார், அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியலன்னா எதுக்கு இந்த ஆட்சி, இந்த அதிகாரம் என கொந்தளித்தார்.
மேலும், ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியமில்லை, இந்த 5 வருடத்தில் குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளையடித்தது தான் முக்கியம். லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு வேலை வழங்கியுள்ளனர். எப்படி Smart ஆக கொள்ளையடித்து ஏமாற்றினார்களோ அப்படி நாமும் Smart ஆக விசில் ஊதி அனுப்புவோம். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல், உங்களுக்கான தேர்தல், மறக்காமல் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள் என கேட்டுக்கொண்டார்.
4 முனைப் போட்டி, 40 முனைப் போட்டி என உருட்டினாலும் இரண்டு முனைப் போட்டி தான். ஒன்று TVK, இன்னொன்று DMK, எவ்வளவு பெரிய வசதியான வாய்ப்பு இருந்தாலும் எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காகவே வந்திருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறி பரப்புரையை முடித்தார். தொடர்ந்து விஜய்க்கு தொண்டர்கள் வெள்ளி வேல் பரிசாக வழங்கினர். பிரச்சார வாகனத்தில் இருந்தபடியே விஜய்யும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
“எல்லா வலிகளையும் தாங்கி கொண்டு.. உங்களுக்காக மட்டும் தான் வந்திருக்கிறேன்” பெரம்பூரில் பரப்புரையை தொடங்கிய விஜய்! | TVK Vijay


