அலோர் செத்தார்: மார்ச் 26 முதல் மாவட்டங்களில் வெப்ப அலை நிலை 2 வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து, கோத்தா செத்தா மற்றும் பெண்டாங்கில் உள்ள 206 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நாளை முதல் செவ்வாய் வரை மூன்று நாட்களுக்கு வீட்டிலிருந்தே கல்வி கற்பார்கள் என மாநில கல்வித் துறை அறிவித்துள்ளது. தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பினால், மாணவர்கள் மறுநாள் தங்கள் வகுப்பறைகளுக்குத் திரும்புவார்கள் என்று அத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கெடாவில் உள்ள பாலிங், பெண்டாங், போகோக் சேனா மற்றும் கோத்தா செத்தார் ஆகிய நான்கு மாவட்டங்களில் மாலை 4 மணிக்கு நிலை 2 வெப்ப அலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. கெடாவில் உள்ள பண்டார் பாரு, கூலிம், கோல மூடா, சிக், படாங் தெராப், குபாங் பாசு மற்றும் புலாவ் லங்காவி ஆகிய பகுதிகளுக்கும், பெர்லிஸ்; செபெராங் பெராய் வடக்கு (பினாங்கு); கோலா கங்க்சார், கிந்தா மற்றும் ஹுலு பெராக் (பேராக்) ஆகிய பகுதிகளுக்கும் நிலை 1 வெப்ப வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சரவாக்கில் உள்ள லுபோக் அந்துவும் இதில் அடங்கும்.
தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்போது மெட்மலேசியா நிலை 2 வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிடுகிறது. அதே சமயம் நிலை 1 என்பது குறைந்தது மூன்று தொடர்ச்சியான நாட்களுக்கு 35-37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதைக் குறிக்கிறது.




