Last Updated:
நங்கூரம் போல நிலைத்து நின்ற விராட் கோலி, 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.
மற்ற வீரர்களில் ஹென்றிச் கிளாசன் 31 ரன்களும், அனிகேத் வர்மா 43 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் 200-ஐ கடக்க உதவினர். ஆர்சிபி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலடி கொடுத்த ஆர்சிபி அணிக்குத் தொடக்கமே அதிரடியாக அமைந்தது. தொடக்க வீரர் பில் சால்ட் 9 ரன்களில் வெளியேறினாலும், விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி அதிரடியில் மிரட்டியது. படிக்கல் வெறும் 26 பந்துகளில் 61 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரஜத் படிதார் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து மிரட்டினார். மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்து நின்ற விராட் கோலி, 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆர்சிபி அணி வெறும் 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 203 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.
Mar 28, 2026 11:33 PM IST


