சட்டவிரோதமான முறையில் 4 லீற்றர் பெற்ரோலைத் தனது கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, 21 நாட்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் 1,500 ரூபா அபராதம் விதித்து நிக்கவரட்டிய நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொபைக்கனே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 48 வயதுடைய பி.எம். லசந்த குமார பாலசூரிய என்ற நபரே இவ்வாறு தண்டனைக்குள்ளாகியுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க பெட்ரோலிய உற்பத்திப் பொருட்கள் (வழங்கல் மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, நிக்கவரட்டிய நீதவான் சந்தன லியனகே இந்தத் தண்டனையை வழங்கினார்.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதயாங்க அத்தபத்து நீதிமன்றில் பின்வரும் விடயங்களை முன்வைத்தார்:
எதிர்வரும் 29 ஆம் திகதி சந்தேக நபரின் வீட்டில் நடைபெறவுள்ள பெற்றோருக்கான தான நிகழ்வுக்காக, வீட்டைச் சுற்றியுள்ள புற்களை வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தவே இந்த 4 லீற்றர் பெற்ரோல் வைக்கப்பட்டிருந்தது.
இது விற்பனைக்காகவோ அல்லது கள்ளச்சந்தையில் வியாபாரம் செய்வதற்காகவோ வைக்கப்பட்டிருக்கவில்லை. இதற்குச் சான்றாக, குறித்த பிரதேச விகாரையின் விகாராதிபதியால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதமும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெட்ரோலிய சட்டத்தின்படி, வாகன உரிமம் மற்றும் காப்புறுதி வைத்திருப்பவர் ஒரு நுகர்வோராகக் கருதப்படுவார் என்றும், அவர் பெற்ரோலை வைத்திருக்க உரிமை உண்டு என்றும் வாதாடிய சட்டத்தரணி, எனினும் ஒரு நுகர்வோர் எவ்வளவு லீற்றர் பெற்ரோலைத் தனது வசம் வைத்திருக்கலாம் என்பது சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்ற சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைக் கருத்திற் கொண்டு 21 நாட்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை விதித்துத் தீர்ப்பளித்தார்.


