அமெரிக்காவுக்கு 2.9 பில்லியன் இழப்பு
ஈரானுக்கு எதிரான இப்போரில் அமெரிக்காவிற்கு ராணுவ வீரர்களின் இழப்பு குறைவு என்றாலும் ராணுவ உபகரணங்கள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. முதல் 3 வார போரில் அமெரிக்காவிற்கு அதிக பட்சமாக 2.9 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பு என்ற விபரத்தை பென்டகன் அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர். குவைத்தில் அமெரிக்காவிற்கு சொந்தமான 3 F-15E ரக போர் விமானங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பும் KC-135 விமானம் மற்றொரு விமானத்தில் மோதி கீழே விழுந்தது. இதில் அதில் இருந்த 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் ஏராளமான எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதம் அடைந்துள்ளன. அதோடு அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9 ரக ட்ரோன்களும் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன. 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமான பாதுகாப்பு ரேடாரை ஈரான் தாக்கி அழித்துள்ளது.
அமெரிக்க வீரர்கள் ஹோட்டலில் தஞ்சம்
ஈரானின் தொடர் தாக்குதல் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களது தளத்தை காலி செய்துவிட்டு இப்போது ஹோட்டல்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் ஹோட்டல்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள பொருளாதார மண்டத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை வான்பாதுகாப்பு இடைமறித்து அழித்தது. இதனால் கீழே விழுந்த கழிவுகள் பட்டு 5 இந்தியர்கள் காயம் அடைந்தனர்.
குவைத்தில் உள்ள புபியான் தீவில் அமெரிக்க கடற்படையினர் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத்தாக்குதல் நடத்தியதில் அந்த தளம் முழுமையாக சேதம் அடைந்து இருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள வர்த்தக துறைமுகம் ஒன்றும் சேதம் அடைந்து இருக்கிறது.

