Last Updated:
இரண்டாம் உலகப் போரின் போது அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக, சர்க்கரை மற்றும் தீப்பெட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களும் இந்த வரியின் கீழ் கொண்டு வரப்பட்டன.
கலால் வரி குறித்தும் அந்த வரி நம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கலால் வரி என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மீது விதிக்கப்படும் ஒரு வகையான மறைமுக வரியாகும். இது பெரும்பாலும் உற்பத்தி நிலையிலேயே வசூலிக்கப்படுகிறது. பொதுவாக, மதுபானங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புகையிலை போன்ற குறிப்பிட்ட பொருட்களின் மீது மத்திய அரசு இந்த வரியை விதிக்கிறது.
ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பிறகு பெரும்பாலான பொருட்கள் அதன் கீழ் கொண்டு வரப்பட்டாலும், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் போன்றவை இன்னும் கலால் வரியின் கீழேயே உள்ளன. சமீபகாலமாக பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியில் செய்யப்படும் மாற்றங்கள், சாமானிய மக்களின் அன்றாடப் பொருட்களின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எரிபொருள் மீதான வரி உயரும்போது, சரக்கு போக்குவரத்துச் செலவு அதிகரிக்கிறது. போக்குவரத்து மூலமாக கொண்டு செல்லப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
நவீன கால கலால் வரி முறையை ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வலுப்படுத்தினர். 1894-ஆம் ஆண்டு பருத்தி நூல்களின் மீது முதன்முதலில் முறையான கலால் வரி விதிக்கப்பட்டது. அதன் பிறகு, 1917-ல் மோட்டார் ஸ்பிரிட் (எரிபொருள்) மீதும், 1922-ல் மண்ணெண்ணெய் மீதும் வரி விதிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக, சர்க்கரை மற்றும் தீப்பெட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களும் இந்த வரியின் கீழ் கொண்டு வரப்பட்டன.


