Last Updated:
ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணமான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தொழிலும் இரவு ஹோட்டல்களும் பாதிப்பு விறகு அடுப்பு தேவை உயர்வு.
வர்த்தக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல இடங்களில் கடைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் போர் காரணமாக உலகம் முழுவதிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் வர்த்தக பயன்பாட்டிற்காக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அவ்வாறு ஒரு சில இடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைத்தாலும் அதிக அளவு டெபாசிட் கேட்பதால் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.
அந்தவகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே நினைவுக்கு வருவது பால்கோவா தான். முன்னொரு காலங்களில் விறகடுப்பு மூலம் பால்கோவா தயாரிப்பு நடைபெற்று வந்த நிலையில் தேவை அதிகரித்ததால் சிலிண்டர் மூலம் ஒரு சில கடைகளில் பால்கோவா தயாரிப்பு நடைபெற்று வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக இருப்பு இருக்கக்கூடிய சிலிண்டர்கள் மூலமாகவும், சந்தையில் கிடைக்கப்பெற்ற ஓரளவு சிலிண்டர்கள் மூலமாகவும் பால்கோவா உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது வர்த்தக சிலிண்டர் விநியோகத்திற்கு கட்டுப்பாடு என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பால்கோவா தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பால்கோவா உற்பத்தியும் சற்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடைகளுக்கு வந்து பால்கோவா கேட்கும்போது அவர்களுக்கு இல்லை என்ற பதில் சொல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க சுற்றுலா ஸ்தலமாக விளங்கக்கூடிய ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியானது மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை கடக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இங்கு செயல்பட்டு வரும் இரவு நேர கடைகளில் தங்களின் இரவு உணவை ருசித்து வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக சிலிண்டர் தட்டப்பாடு காரணமாக பெரும்பாலான இரவு உணவகங்கள் மூடப்பட்டன.
மேலும் இயங்கி வரும் ஒரு சில ஹோட்டல்களும் வாரத்திற்கு இரு நாள் விடுமுறை என்ற அடிப்படையில் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இக்கடைகளுக்கு விநியோகிக்கப்படும் வாழை இலை கட்டு விலை மாபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 800 ரூபாய்க்கு விற்ற மாலை கட்டு தற்போது 100 ரூபாய் 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் வாழை இலை கடைக்காரர்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஒருபுறம் இருந்தாலும் மாற்றி எரிசக்தியை தேடி ஹோட்டல் கடைக்காரர்கள் மற்றும் பால்கோ உற்பத்தியாளர்கள் செல்ல துவங்கி உள்ளனர். இதன் காரணமாக இங்கு இயங்கி வரும் அடுப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் விறகு அடுப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக குறைந்த அளவு விறகு கொண்டு இயக்கயக்கூடிய அடுப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் வெல்டிங் தொழிற்சாலைகளில் அதிக அளவு அடுப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் அடுப்புகள் அண்டை மாநிலங்களான கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாகை மாவட்டத்தில், வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், எட்டுக்குடி போன்ற பகுதிகளில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஆயிரத்து 800 ரூபாயாக இருந்த நிலையில், 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மட்டுமே தற்போது கிடைப்பதாக உணவக உரிமையாளர்கள் மற்றும் கேட்டரிங் தொழில் செய்பவர்கள் கூறினர்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: அடுத்தடுத்து மூடப்படும் ஹோட்டல்கள்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!


