Last Updated:
அமெரிக்கா தரப்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கூடுதல் படைகளை அனுப்பும் ஆலோசனைகள் நிலவி வருகின்றன
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் சமாதான திட்டங்களை ஈரான் நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள நிலையில், உலகில் அதிகமான எரிசக்தி பொருட்களை கொண்டு செல்லும் கடல் வழி தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது நட்பு நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அடைத்து விட்டது.
இதன் விளைவாக உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதால் சர்வதேச அளவில் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையே, போரை முடிவுக்கு வர ஈரான் தன்னிடம் கெஞ்சியதாகவும், 5 நாட்களுக்கு போரை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாட்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார். இருப்பினும், இதுபோன்ற எந்த கோரிக்கையையும் ஈரான் தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
தற்போது அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப்பட்டால், அது தாக்குதல் நடத்துபவர்களுக்கு “மிகவும் ஆபத்தானதாகவும் மற்றும் அதிக விலை கொடுக்க வேண்டியதாகவும்” இருக்கும் என்று ஈரான் தரைப்படை தளபதி பிரிகேடியர் ஜெனரல் அலி ஜஹான்ஷாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய எல்லைகளைத் தனது படைகள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுக்கொடுக்காமல் எதிரிகளை முடக்கும் திறன் தங்களுக்கு இருப்பதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அமெரிக்கா தரப்பிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குக் கூடுதல் படைகளை அனுப்பும் ஆலோசனைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் எலைட் பிரிவான ’82வது ஏர்போர்ன் டிவிஷன்’ பிரிவைச் சேர்ந்த சுமார் 2,000 முதல் 3,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்பிரிவு உலகில் எந்தப் பகுதிக்கும் 18 மணி நேரத்தில் சென்று பாராசூட் மூலம் குதித்துத் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. ஏற்கனவே கத்தார், குவைத், ஈராக் போன்ற நாடுகளில் சுமார் 50,000 அமெரிக்க வீரர்கள் நிலைகொண்டுள்ள நிலையில், இந்தப் புதிய நடவடிக்கை போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.
Iran vs US : டிரம்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்.. போர்க்களத்தின் தற்போதைய நிலவரம் என்ன?


