Last Updated:
தலைசிறந்த விக்கெட் கீப்பரிடமிருந்து 2 இளைஞர்கள் பயிற்சி பெறுகிறார்கள் என்றும் இது போன்ற வீடியோவை சென்னை அணி வெளியிட்டதில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர்களுக்கு தோனி பயிற்சி அளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை அணியும் கடந்த சில வாரங்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி பெற்று வருகிறது.
முந்தைய சீசன்களை விடவும் இந்த சீசனில் சென்னை அணியில் விளம்பரர்கள் அதிகம் உள்ளார்கள். குறிப்பாக இளம் வீரர்கள் உர்வில் படேல் மற்றும் கார்த்திக் சர்மா ஆகியோர் இந்த சீசனில் விக்கெட் கீப்பர்களாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கார்த்திக் சர்மாவை சென்னை அணி 14 கோடியே 20 லட்சம் ரூபாய் தொகைக்கு வாங்கி இருந்தது.
இந்த நிலையில் இந்த 2 வீரர்களுக்கும் சீனியர் வீரரும் சென்னை அணியின் முதன்மை நட்சத்திர ஆட்டக்காரருமான தோனி பயிற்சியளிக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்வது எப்படி, கீப்பிங் செய்யும்போது என்னென்ன நுணுக்கங்களை கையாள வேண்டும் என்பது குறித்து இருவருக்கும் தோனி சிறப்பு பயிற்சியை வழங்குகிறார். இந்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை அணி ஏற்கனவே 5 முறை ஐபிஎல் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த முறை ஆறாவது தடவையாக சென்னை அணி கோப்பையை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.


