சிக், கெடா | மார்ச் 25, 2026
கெடா மாநிலத்தின் சிக் மாவட்டத்தில் உள்ள சுங்கை மூடா (Sungai Muda) ஆற்றில் குளிக்கச் சென்ற 8 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
மரணமடைந்த சிறுவன் முகமட் ஃபதா சைஃபுல், கோத்தா புக்கிட் தேசியப் பள்ளியில் (SK Kota Bukit) பயின்று வந்த மாணவன் ஆவான். நேற்று மதியம் 2:00 மணியளவில் தனது நண்பர்களுடன் மிதிவண்டியில் விளையாடச் சென்ற அந்தச் சிறுவன், மாலை 4:30 மணியளவில் ஆற்றுக்குச் சென்றுள்ளான்.
ஆற்றில் குதித்த சற்று நேரத்திலேயே சிறுவன் நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளான். அவனுக்கு நீச்சல் தெரியாது என்பதும், அவன் அந்த ஆற்றுக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுவன் நீரில் மூழ்கியதைக் கண்ட அவனது நண்பர்கள், உடனடியாக கிராம மக்களிடம் உதவி கோரினர். அங்கிருந்த நபர் ஒருவர் ஆற்றில் குதித்து சிறுவனை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். மாலை 5:00 மணியளவில் இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாயாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார அமைச்சக அதிகாரிகள், சிறுவனைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர் என்று, சிக் மாவட்டத் துணைப் போலீஸ் தலைவர் டிஎஸ்பி சஃபுவான் முகமது நூர் (DSP Safuan Md Noor) கூறினார்.
சிறுவனின் உடலில் எவ்விதக் காயங்களும் இல்லை. இதில் எந்தவிதமான சதிச் செயலோ அல்லது குற்றப் பின்னணியோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு ‘திடீர் மரணம்’ (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சிக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவனி வீடு ஆற்றிலிருந்து வெறும் 5 நிமிட நடைப்பயணத் தூரத்தில் இருந்தும், இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




