ஜார்ஜ் டவுன் | மார்ச் 24, 2026
பெர்சத்து (Bersatu) கட்சி தற்போது எதிர்கொண்டு வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமைத்துவ நெருக்கடிகளுக்குத் தீர்வாக, அக்கட்சியினர் மீண்டும் தங்கள் தாய் அமைப்பான அம்னோவில் (Umno) இணைய வேண்டும் என்று அம்னோவின் மூத்த தலைவர் டான்ஸ்ரீ முகமட் யூசோஃப் லத்தீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெர்சத்து கட்சியின் ஒற்றுமை பலவீனமடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய யூசோஃப் லத்தீப், அக்கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கிடையே நிலவும் அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம் எனத் தெரிவித்தார். குறிப்பாக, டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மற்றும் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் ஆகியோருக்கு இடையே நிலவும் தலைமைத்துவ மோதலை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஹம்சா ஜைனுதீன் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் மற்றும் அவர் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கக்கூடும் என்ற யூகங்கள் என்பனவும், பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் இருந்தாலும், அதன் போக்கு பக்காத்தான் ஹராப்பான் (PH) பக்கம் சாய்ந்திருப்பது போன்ற தோற்றம் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பெர்சத்து கட்சியே அம்னோவிலிருந்து பிரிந்து சென்ற ஒரு கிளைதான். முஹிடின் யாசின், அஸ்மின் அலி போன்ற தலைவர்களின் அரசியல் டிஎன்ஏ (DNA) அம்னோவைச் சார்ந்தது. எனவே, மலாய் மக்களின் ஒற்றுமைக்காகவும், தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் மீண்டும் அம்னோவில் இணைவதே சரியான முடிவாக இருக்கும்,” என அவர் வலியுறுத்தினார்.
ஏற்கனவே அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, கட்சியை விட்டு நீக்கப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ‘ருமா பெங்சா’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளார். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நோன்பு (Aidilfitri) பெருநாளை முன்னிட்டு, கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து, மலாய் மக்களின் நலனுக்காக தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று யூசோஃப் லத்தீப் கேட்டுக்கொண்டார். குறிப்பாக முஹிடின் யாசினின் அனுபவம் மற்றும் செல்வாக்கு அம்னோவைப் பலப்படுத்த உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




