Last Updated:
TVK Alliance | புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக நேற்று அறிவித்த நிலையில், 2 தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதன்படி, பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சாய் சரவணக்குமாருக்கு திருப்புவனை தொகுதியும், சுயேச்சை எம்எல்ஏ பிரகாஷ் குமாருக்கு முத்தியால்பேட்டை தொகுதியும் அளிக்கப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை தொகுதியில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் போட்டியிடுகிறார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் அசனா காரைக்கால் தெற்கு தொகுதியிலும், பெரியசாமி நெட்டப்பாக்கம் தொகுதியிலும் விஜய் வாய்ப்பு அளித்துள்ளார். ராஜ்பவன் தொகுதியில் ஓய்வு பெற்ற ஐஜி சந்திரன் போட்டியிடுகிறார். அரியாங்குப்பத்தில் தேமுதிகவிலிருந்து வந்த குமாரவேலு, மணவெளியில் பாஜக வட்டாரத் தலைவராக இருந்த ராமு, வில்லியனூரில் லஜகவிலிருந்து வந்த பூக்கடை ரமேஷ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தவெக கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை விஜய் அறிவித்திருந்தார். நேற்று கூட்டணி இல்லாமல் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இன்று 2 தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தவெக அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, “நேயம் மக்கள் கழகம்” நிறுவனத் தலைவர் நேரு (எ) குப்புசாமி எம்எல்ஏ, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் “உருளையன்பேட்டை” மற்றும் “தட்டாஞ்சாவடி” ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று கூறியிருக்கிறார்.
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)


