மருத்துவமனை கிளினிக்குகளின் மூலம் நோயாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் மருந்துகளை, இனிவரும் காலங்களில் இரண்டு மாதங்களுக்குப் போதுமானதாக ஒரே தடவையில் வழங்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி, எரிசக்தி முகாமைத்துவத்தை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், நோயாளர்களுக்கு ஏதேனும் அவசரத் தேவை ஏற்பட்டால், வழக்கம் போல் கிளினிக்குகளுக்குச் சமூகமளிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஏனைய நிலையங்களில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பல்வேறு கிளினிக்குகள் செயற்பட்டு வருகின்றன.
இதேவேளை, எரிசக்தி நெருக்கடி காரணமாகப் பல்வேறு சவால்கள் எழுந்துள்ள போதிலும், மருத்துவமனைகளின் அறுவைச் சிகிச்சை நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் ஹன்சக விஜேமுனி மேலும் தெரிவித்தார்.


