
ஹார்முஸ் நீரிணை பிரச்சினையைத் தொடர்ந்து ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தியாவசிய கட்டமைப்புகள் குறிவைக்கப்படலாம் என உலகளவில் கவலை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தனது மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக மூடிவிட்டு, பிராந்திய எரிசக்தி மற்றும் நீர் உள்கட்டமைப்புகள் மீது பதிலடித் தாக்குதல்களைத் தொடுப்போம் என்று ஈரான் கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான பதற்றம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானின் மின்நிலையங்களை “அழித்துவிடுவோம்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு பதிலளித்த ஈரான், மத்திய கிழக்கில் உள்ள முக்கிய கட்டமைப்புகளை “மீண்டும் திருத்த முடியாத அளவுக்கு அழித்துவிடுவோம்” என கடுமையாக எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் தெற்குப் பகுதிகளில் ஈரான் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஈரான் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தியிருப்பது இந்த மோதல் மேலும் விரிவடையும் அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது.
போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய வசதிகளை குறிவைக்கும் நிலைக்கு சென்றிருப்பது உலகளவில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் தாக்குதலுக்குரிய இலக்குகளாக கருதப்படும் என தெரிவித்துள்ளார். தனது நாட்டின் கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், அதற்கு பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில்,ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களை மீறக்கூடும் என்றும், இது பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

