Last Updated:
மலையாள நடிகை நமிதா பிரமோத்தை சமூக வலைதள பக்கங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்.
பிரபல மலையாள நடிகை நமிதா பிரமோத்தை வழிமறித்துத் தாக்கியதாக அவரது ரசிகர் ஒருவரை, எர்ணாகுளம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஸ்டூடியோவிற்கு நடந்து சென்ற நடிகையிடம் அத்துமீறிய சம்பவத்தில் நடந்தது என்ன?
மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நமிதா பிரமோத். கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த இவர் டிராபிக் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் என் காதல் புதிது, நிமிர், அவள் பெயர் ரஜினி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் பங்கேற்ற இவரை சமூக வலைதள பக்கங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில், நடிகை நமிதா பிரமோத், டாட்டூ போட்டுக் கொள்ளப்போவதாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது பதிவில் டாட்டூ போடப்போகும் டாட்டூ ஸ்டூடியோவையும் லோகேஷனுடன் தெரிவித்திருந்தார். சம்பவ நாளில் குறிப்பிட்ட டாட்டூ ஸ்டூடியோவுக்கு சென்ற நடிகையை எதிர்பாராத விதமாக ஒரு இளைஞர் வழிமறித்துள்ளார். நீங்கள் ஏன் டாட்டூ போட செல்கிறீர்கள்? டாட்டூலாம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று கூறி, நடிகையை அவர் மிரட்டி இருக்கிறார்.
அதற்கு நடிகை, டாட்டூ போட்டுக் கொள்வது தனது தனிப்பட்ட விஷயம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து டாட்டூ ஸ்டூடியோவை நோக்கி சென்றிருக்கிறார். ஆனால், நடிகையை விடாது பின்தொடர்ந்த அந்த நபர், அங்கிருந்து நகரவிடாமல் தடுத்து பிரச்சினை செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த நடிகை, தனது நண்பருக்கு தகவல் கொடுத்து பாலாரி வட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டாட்டூ போடுவதற்காகச் சென்ற தன்னை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தி தகராறு செய்து மிரட்டியதாகவும், தவறான முறையில் தொட்டதாகவும் கூற அளிக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எர்ணாகுளத்தில் விசாரணையில் இறங்கினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விபின் என்ற இளைஞரை கைது செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


