அரசாங்கத்தினால் அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா, இன்று (22) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு முச்சக்கரவண்டி சேவைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேவையை முன்னெடுப்பதற்குப் போதுமான எரிபொருள் சந்தையில் இல்லை. அதேவேளை, அரசாங்கம் விலைகளையும் அதிகரித்துள்ளது. இது “மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டியது போன்ற“ இக்கட்டான நிலையாகும்.
முச்சக்கரவண்டி கட்டணத்தின் முதலாவது கிலோமீற்றருக்காக 20 ரூபாயை அதிகரிக்குமாறு சங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்தக் கட்டண அதிகரிப்பை மீற்றர்களை (Meters) முறையாகப் பயன்படுத்தும் சாரதிகளால் மட்டுமே சரியாக நடைமுறைப்படுத்த முடியும்.
நிலவும் இக்கட்டான சூழ்நிலை குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்துவதற்காக, விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


