வான் பாதுகாப்பு ஏவுகணையை தடுக்க தவறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆராய்ச்சி மையங்கள் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. டிமோனா நகரம் குட்டி இந்தியா என்று அழைக்கப்படுகிறது. இஸ்ரேலில் வாழும் இந்திய யூதர்களின் முக்கிய மையமாகும். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் மகாராஷ்டிராவிலிருந்து புலம் பெயர்ந்த இந்திய யூதர்கள் ஆவர். சுமார் 7,500 இந்திய வம்சாவளியினர் இங்கு வாழ்கின்றனர். இது அந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும்.
கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையத்தை தாக்குவோம்
ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா (PBUH) மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், “முந்தைய எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, ஒருவேளை எதிரிகளால் ஈரானின் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டால், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு சொந்தமான அனைத்து எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் கடல்நீரை சுத்திகரிக்கும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்”என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஜப்பான் கப்பல்களை அனுமதிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.

