தெஹ்ரான் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவ தளம் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளை ஈரான் இன்று ஏவியது. அவற்றில் ஒரு முயற்சி தோல்வியடைந்தது. மற்றொரு ஏவுகணை இடைமறிக்கப்பட்டது.
ஈரானில் இருந்து 4 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இந்த இலக்கை குறிவைத்து ஈரான் தாக்க முயன்றது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சம் ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை 2 ஆயிரம் கி.மீ. சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே ஈரானிடம் உள்ளன என நினைத்த மேற்கு உலக நாடுகளை ஈரான் மிரள விட்டுள்ளது. ஈரான் வெளியுலகிற்கு கூறும்போது, தன்னிடம் 2 ஆயிரம் கி.மீ. தொலைவை சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே உள்ளன என தொடர்ந்து கூறி வந்தது.
ஆனால் இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே அச்சம் ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், சமீபத்தில், அமெரிக்காவின் ரேடார்களில் சிக்காத திறன் வாய்ந்த, அதிநவீன எப்-35 ரக போர் விமானம் ஒன்றை ஈரான் தாக்கியிருந்தது. இது உலக நாடுகளை திகைக்க வைத்தது. இந்த சூழலில், ஈரான் மற்றொரு தாக்குதலை நடத்தி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை மிரள விட்டுள்ளது.
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. அது முதற்கொண்டு நடந்த தாக்குதலில் ஈரானில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரான், ஈரானின் தீவு உள்பட லெபனான், சிரியா நாடுகளும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றன.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தளபதிகள், அதிகாரிகள் என பலர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மற்றும் பிற நாடுகளில் அமைந்த அந்நாடுகளின் படை தளங்களை தாக்கி வருகிறது.




