Last Updated:
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். இதற்கான காரணம் என்ன தெரியுமா?
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 23ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் நிறைவடைகிறது.
புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணியும், திமுக – காங்கிரஸின் கூட்டணியும் அமைந்துள்ளது. இதில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஏற்படாமலே இருந்துவருகிறது. அதேசமயம், என்.டி.ஏ. கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவாகி, என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும், பாஜகவின் 14 தொகுதிகளில் அதிமுக மற்றும் லஜகவுக்கு தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் இன்று காலையே என்.ஆர். காங்கிரஸின் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி இரண்டு தொகுதிகளில் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். அதன்படி தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் அவர் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சராக இருந்துவரும் ரங்கசாமி, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்று முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஒரு முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எனவே சென்டிமென்ட் காரணமாக இந்த முறையும் அவர் இரண்டு தொகுதிகளில் தனது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 2011 ஆம் பிப்ரவரி மாதத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ரங்கசாமி துவங்கினார். 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கதிர்காமம், இந்திரா நகர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார்.
2016-ல் தட்டாஞ்சாவடி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி எதிர்கட்சி தலைவரானார். மீண்டும் 2021-ல் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் போட்டியிட்டார். ஏனாமில் தோற்றாலும் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
அதே முதலமைச்சர் சென்டிமென்ட்டில் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிடுகிறார் எனச் சொல்லப்படுகிறது.
Puducherry (Pondicherry)


