Last Updated:
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி உறுதி. முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து ஆலோசனை.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், என்.டி.ஏ. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடருமா என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது கூட்டணி உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 23ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் நிறைவடைகிறது. புதுச்சேரியில், என்.ஆர். காங்கிரஸ் – பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணியும், திமுக – காங்கிரஸின் கூட்டணியும் அமைந்துள்ளது. இதில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஏற்படாமலே இருந்துவருகிறது.
அதே சமயம், என்.டி.ஏ. கூட்டணியின் தொகுதி பங்கீடு கடந்த 13ஆம் தேதி முடிவானது. இதில், என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் போட்டியிடும் எனவும், பாஜகவின் 14 தொகுதிகளில் அதிமுக மற்றும் லஜகவுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டணி முடிவாகி, தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையிலும் என்.ஆர். காங்கிரஸ், என்.டி.ஏ. கூட்டணியில் தொடருமா எனும் சந்தேகம் இருந்துவந்தது. குறிப்பாக லஜகவை என்.டி.ஏ. கூட்டணியில் சேர்க்கக் கூடாது என என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வலியுறுத்திவந்திருந்தார்.
இந்தச் சூழலில், பாஜக மேலிடப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நட்சத்திர விடுதியில் சந்தித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில், கூட்டணி உறுதி செய்யப்பட்டு, என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும், அதிமுக மற்றும் ல.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
Puducherry (Pondicherry)


