அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த மாதம் 28 ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகவும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான சவுத் பார்ஸ் மீது இஸ்ரேல் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இது ஈரானின் மொத்த எரிவாயு உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கைக் கொண்டிருப்பதோடு, பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலுக்கான மூலப்பொருட்களை வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த ஆலை மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய சமையல் எரிவாயு ஆலைகளில் ஒன்றான ராஸ் லஃபான் ஆலையை ஈரான் தாக்கியது. இந்த ஆலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என்று கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
உலகின் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு ராஸ் லஃபானில் இருந்து பெறப்பட்டு வரும் நிலையில், இந்த ஆலையில் உற்பத்தி முடங்கியிருப்பதால் உலகின் சமையல் எரிவாயு விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அதேபோல, குவைத்தில் மினா அல் அகமது மற்றும் மினா அப்துல்லா எண்ணெய் நிறுவனங்கள் மீது டிரோன்களை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியது. சவுதியிலும் எண்ணெய் நிறுவனங்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது. பிரபல அரம்கோ எண்ணெய் நிறுவனம் மீது ஈரான் டிரோன்களை ஏவியது.
இஸ்ரேலின் நாட்டின் ஹைஃபா நகரில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்று அஷ்டோட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் (Ashdod refineries ) மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. முதல் முறையாக ‘Nasrallah’ வகை ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களில் ஒன்றான எப்-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் பட்சத்தில் வளைகுடா நாடுகளில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அதேநேரம், இஸ்ரேல் ஈரானில் உள்ள சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்காவுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனிமேல் எவ்விதத் தாக்குதலையும் நடத்தாது என்று உறுதியளித்துள்ள டிரம்ப், கத்தாரின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் புதிய தாக்குதல்கள் தொடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை அருகே சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானிய கடற்படை இலக்குகளை தாக்கி அழித்த வீடியோ காட்சியை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான முறையில் எரிபொருள் போக்குவரத்து நடைபெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன.
வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் சூழல் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்கா நீக்கக்கூடும் என்று அந்நாட்டு கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மூன்று வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் லெபனானில் இதுவரை 118 குழந்தைகள் உட்பட 1,001 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்தாவிட்டால் அந்நாடு மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
இந்தியாவின் சமையல் எரிவாயு இறக்குமதியில் 40 விழுக்காடு கத்தாரில் இருந்து வந்து கொண்டிருந்த நிலையில், அந்நாட்டின் முக்கிய எரிவாயு வயல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார். எரிவாயு தேவையை பூர்த்தி செய்ய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியுள்ளார்.

