கூச்சிங் :
நாளை நடைபெறும் ஹவானா 2024 உச்ச மாநாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அனுவார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் என்றும், அதில் ஊடகவியலாளர்களுக்கான நல்ல அறிவுப்புகளை அவர் அறிவிப்பார் என பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியரும் ஹவானா தின ஒருங்கிணைப்புத் தலைவருமாகிய அருள் ராஜூ துரைராஜ் தெரிவித்தார்.


2018 ஆம் ஆண்டில் தலைநகரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹவானா 2024 எனப்படும் தேசிய ஊடகவியலாளர்கள் தினம் இம்முறை நான்காவது தடவையாக சரவாக்கில் நடைபெறுகிறது. முன்னதாக 2022 ஆம் ஆண்டு மலாக்காவிலும் 2023 பேராக்கிலும் நடைபெற்றது என அவர் குறிப்பிட்டார்.
இத்தினத்தை முன்னிட்டு மே 25 தொடங்கி சுமார் 1,000 உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகப் பயிற்சியாளர்கள் கூச்சிங்கில் ஒன்றுகூடியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.


இக்கூட்டத்தில் செய்தி ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் பணிபுரிபவர்கள் மற்றும் உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடக சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர்.


கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான், குவைத், புருனே, பிலிப்பைன்ஸ், திமோர் லெஸ்டே, வியட்நாம், சீனா, கொரியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் ஊடகப் பிரதிநிதிகளுடன் நம்நாட்டு ஊடக பணியாளர்களும் இங்கு குவிந்துள்ளனர்.


3 நாட்களாக நடைபெற்று வரும் இத்தினத்தில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் கலந்துகொண்டு வருகிறார் எனவும் அருள் குறிப்பிட்டார்.


