Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்களிடம் இளம் எம்.பி.க்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறினார்.
மூத்த தலைவர்களிடம் இளம் எம்.பி.க்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில், மாநிலங்களவையில் பேசிய பிரதமர், மூத்த உறுப்பினர்கள் எச்.டி. தேவே கவுடா, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சரத் பவார் குறித்து பேசினார்.
பிரதமரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்த தேவே கவுடா, ஜனநாயகம் செழிக்க ஆரோக்கியமான விவாதங்களே அடிப்படை என்றார். அதேநேரத்தில் அனுபவம் என்பது விவாதங்களில் மட்டுமல்ல, மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுப்பதிலும் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கட்சி எல்லைகளைக் கடந்து பரஸ்பர மரியாதை உணர்வு மேலோங்குகிறது. தங்களது பதவிக்காலத்தை நிறைவுசெய்து அவையை விட்டு வெளியேறும் தலைவர்களிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். அரசியலுக்கு முடிவே இல்லை.
அனைத்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அர்ப்பணிப்புடன் சபைக்கு வந்து, சமூகத்தின் மீதான பொறுப்புகளை நிறைவேற்றுவது ஆகியவை மூத்த தலைவர்கள் வெளிப்படுத்தும் ஊக்கமளிக்கும் குணங்களாகும். அவர்களின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன்” இவ்வாறு பேசினார்.
அரசியல் களத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் மோதல்கள் நிலவினாலும், நாடாளுமன்ற அவைக்குள் மூத்த தலைவர்களின் அனுபவத்திற்குப் பிரதமர் மதிப்பளித்தது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகப் பண்பாகப் பார்க்கப்படுகிறது.

