கோத்தா திங்கி, மார்ச் 18, 2026 :
ஜாலான் மாவாய், பத்து 3 (Batu 3, Jalan Mawai) பகுதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வெள்ள நீர் வடிகால் கால்வாய்க்குள் பாய்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர்.
நேற்று மதியம் சுமார் 2:07 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. காரில் மூன்று பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் பயணம் செய்துள்ளனர். கார் ஒரு வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பெரிய கால்வாய்க்குள் விழுந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இருவரை மீட்டனர். மீட்புப் படையினர் வருவதற்கு முன்பே, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மற்ற மூன்று பேர் காரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
காயமடைந்த அனைவரும் உடனடியாக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஸ்திரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி அஸ்மி சுலைமான் தெரிவித்தார்.
ஜாலான் மாாவாய் மற்றும் கோத்தா திங்கி சாலைகளில் சமீபகாலமாக விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் இதே பகுதியில் நடந்த மற்றொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இப்பகுதியில் உள்ள ஆபத்தான வளைவுகள் மற்றும் சாலை வசதிகள் குறித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
காவல்துறையினர் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




