Last Updated:
உச்ச நீதிமன்றம், தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயதைக் காரணம் காட்டி மகப்பேறு பலன்களை மறுப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக தீர்ப்பளித்துள்ளது. 12 வார விடுமுறை வழங்க உத்தரவு.
குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு பலன்களை வழங்குவதில் இருந்த வயதுக் கட்டுப்பாட்டை நீக்கி, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சமூக பாதுகாப்புச் சட்டம், 2020 இன் படி, தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயது 3 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே அந்தத் தாய்க்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்த விதியை எதிர்த்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள், பர்திவாலா, மகாதேவன் அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், தத்தெடுக்கப்படும் குழந்தையின் வயதைக் காரணம் காட்டி மகப்பேறு பலன்களை மறுப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 3 மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்க்கும், அதற்குக் குறைவான வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் தாய்க்கும் உள்ள பொறுப்புகள், பராமரிப்புத் தேவைகள் ஒன்றே என்றும் அதனால் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டுவது நியாயமற்றது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இதனால், சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுக்கும் ஒரு தாய் அல்லது வாடகைத் தாய், அக்குழந்தை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தேதியிலிருந்து 12 வார காலத்திற்கு சம்பளத்துடன் விடுமுறை பெறலாம் என்றும் தீர்ப்பளித்தனர். தந்தையர்களுக்கான விடுமுறை குறித்த சட்டத்தைக் கொண்டு வரவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


