Last Updated:
மம்தா பானர்ஜி மீண்டும் சுவேந்து அதிகாரியை எதிர்த்து பவானிபூரில் போட்டியிடுகிறார்.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று (15ஆம் தேதி) அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநிலங்களிலும் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 23ஆம் தேதியும், புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய மூன்று சட்டமன்றங்களுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதியும் வாக்குப் பதிவுகள் நடக்கின்றன. மேற்கு வங்கம் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது.
இதில், அசாமில் பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியிலும் இருந்துவருகிறது. தமிழ்நாட்டைத் தவிர்த்து, கேரளம் மற்றும் மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலில் மும்முரமாக இயங்கிவருகிறது. அதேபோல், நான்காவது முறையாக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இலக்கோடு மேற்குவங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது அரசியல் பணிகளை வேகப்படுத்தியுள்ளார்.
294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்கத்தில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக நேற்று (16ஆம் தேதி) அறிவித்தது. இதில், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸில் முக்கிய தலைவராகவும், முதல்வர் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்த சுவேந்து அதிகாரி, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து இந்தத் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.
இந்தச் சூழலில்தான் சுவேந்து அதிகாரி மீண்டும் நந்திகிராம் மற்றும் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வென்ற பவானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் 291 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி, 2021 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற பவானிபூரில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2021ல் நந்திகிராம் தொகுதி தேர்தல் முடிவுபோல் 2026 பவானிபூர் தேர்தல் முடிவு பெரிதும் கவனிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
சுவேந்து அதிகாரியை எதிர்த்து மீண்டும் மம்தா பானர்ஜி போட்டி! வெளியான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்


