Last Updated:
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் அரச குடும்பத்தினருக்கு சொந்தமான அரண்மனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கௌடியார் (Kowdiar) அரண்மனையில் வசித்து வருகின்றனர். மூன்று மாடிகளை கொண்ட இந்த அரண்மனையில் 150க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
மிகுந்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள இந்த அரண்மனையில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதம், வைரம், மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட மாலைகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாய் என்பவர், திருவனந்தபுரம் பேரூர் கடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமி பாயின் படுக்கை அறையில் உள்ள பீரோவில் இருந்து நகைகள் திருடப்பட்டதாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அரண்மனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரண்மனையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரண்மனையைப் பற்றி அறிந்த ஒருவரே கைவரிசை காட்டியிருக்கலாம் என்றும், ஒரே சமயத்தில் அல்லாமல், பல சந்தர்ப்பங்களில் இவ்வளவு பெரிய அளவிலான நகைகளை திருடிச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
150க்கும் மேற்பட்ட அறைகள்.. ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை.. திருவிதாங்கூர் அரண்மனையில் அதிர்ச்சி!


