Last Updated:
TVK Vijay | விருப்ப மனு அளித்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் காலை முதலே பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சித் தலைவர் விஜய் நேர்காணல் நடத்தாததால் ஏமாற்றமடைந்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனு பெறப்பட்டது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் அக்கட்சித் தலைவர் விஜய் கடந்த வாரம் நேர்காணல் நடத்தினார்.
அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை பனையூர் அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக விருப்ப மனு அளித்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் காலை முதலே பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். தங்களிடம் விஜய் நேர்காணல் நடத்துவார் என்று நிர்வாகிகள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட மாநில நிர்வாகிகள் மட்டும் நேர்காணல் நடத்தியுள்ளனர். இதனால், நேர்காணலுக்கு வந்த புதுச்சேரி நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர்.

