தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் போரபண்டா பகுதியைச் சேர்ந்தவர் முரளி வேணு, இவருக்கு சத்தியவதி என்பவருடன் திருமணமாகி ஐந்து மற்றும் இரண்டு வயதில் மகன் மற்றும் மகள் இருந்தனர். முரளி வேணு மின் துறையில் லைன்மேன் வேலை செய்துவந்துள்ளார்.
மின்துறையில் பணியாற்றியவர், தொட்டதற்கெல்லாம் ஷாக் அடித்தது போன்று மனைவியுடன் மல்லுக்கட்டி வந்துள்ளார். சரியான சிடுமூஞ்சி என்பதால் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் வீட்டிற்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நாம் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான் என்று மனதை ஆறுதல்படுத்திக் கொண்ட அப்பாவிப் பெண், அதைக் கடந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், குளிப்பதற்காக கேஸ் அடுப்பில் சத்தியவதி வெந்நீர் வைத்துள்ளார். அதைப் பார்த்த கணவர் முரளி வேணு, சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் ஏன் கேஸ் அடுப்பில் வெந்நீர் வைக்கிறாய்? என்று சூடாகியுள்ளார். அதற்குப் பதில், மின்சார அடுப்பில் வெந்நீர் போட்டுக் கொள்ளக் கூடாதா? என்று மனைவியைக் கண்டித்துள்ளார். அந்தப் பெண்ணோ, மின் துறையில் பணியாற்றினால் மின்சாரம் ஓசியாகவா கொடுப்பார்கள்? என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டுள்ளார்.
அன்றைய தினம் திருமண நாள் என்பதால் கணவனுடன் பதிலுக்கு பதில் சண்டை போடுவதை சத்தியவதி தவிர்த்துள்ளார். மாறாக, இன்று தமது திருமண நாள் என்பதால், குழந்தைகளுடன் ஜாலியாக எங்கேயாவது வெளியே சென்றுவரலாம் என கேட்டுள்ளார். அதற்கும் சிடுமூஞ்சி கணவர், தனக்கு வேலை இருக்கிறது… நீ வேண்டுமானால் போயிட்டு வா என்று பொறுப்பில்லாமல் கூறியுள்ளார். அதே வேளையில், முரளி வேணு அன்றைய தினம், தனது தந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அவர் வீடு திரும்பியதும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தந்தையை அழைத்துச் செல்லும் உங்களுக்கு, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடியாதா? என்று தர்க்கம் செய்துள்ளார். அதையும் கணவன் அலட்சியம் செய்ததால், இனி இவருடன் சேர்ந்து வாழ்வதற்கு சாவதே மேல் என்று இளம்பெண் விபரீத முடிவு எடுத்துள்ளார். மனதை கல்லாக்கிக் கொண்டு தனது இரு குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார்.
அதில், 2 குழந்தைகளும் மூச்சுப் பேச்சின்றி கிடந்ததை அறிந்ததும் சத்தியவதி, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து விரைந்துவந்த போலீசார் சத்தியவதி உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இரு குழந்தைகளையும் மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்ததில் 5 வயது சிறுவன் ருத்ரன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இரண்டு வயது பெண் குழந்தை தன்விகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமண நாளில் வெளியே அழைத்துச் செல்ல கணவன் மறுத்த கோபத்தில் இளம்பெண், பெற்ற குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

