Last Updated:
திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையின் ஒரு அறையில் உள்ள அலமாரியில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள ரத்தினக் கற்கள், மரகத மாலைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் திருட்டுப் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில், மரகத மாலை, ரத்தின கற்கள் போன்ற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடுபோன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பு கொண்ட திருவிதாங்கூர் அரண்மனை நகைகளில் கைவைத்தவர்கள் யார்? உள்ளே பணியாற்றும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில், உண்மை அம்பலமாகுமா?
கேரளாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதியை சுதந்திரத்துக்கு முன்பு திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் ஆட்சி செய்தனர். அக்கால கட்டமான 1934-ல் திருவிதாங்கூர் மன்னராக இருந்த பாலராம வர்மா, திருவனந்தபுரத்தின் கவடியார் பகுதியில் 3 மாடிகள், 150-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட பிரமாண்ட திருவிதாங்கூர் அரண்மனையைக் கட்டியுள்ளார். ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவருந்தும் வகையிலான பெரிய அறையும் உள்ளது. தற்போது இங்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை.
இந்த நிலையில் அரண்மனையின் ஒரு அறையில் உள்ள அலமாரியில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள ரத்தினக் கற்கள், மரகத மாலைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் திருட்டுப் போனதாக திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அஸ்வதி திருநாள் கவுரிபாய் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தனது படுக்கை அறையில் உள்ள அலமாரியில் இருந்து 12 நகைகள் திருடு போயுள்ளதாகக் கூறிய கவுரிபாய் 40 சவரன் கொண்ட அந்த நகைகளின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் நகைகள் திருடு போனது தெரியவர உடனடியாக போலீசில் புகார் கொடுக்காமல் அரண்மனைக்குள்ளேயே மன்னர் குடும்பத்தினர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், பல கட்ட விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்காததால் அதன் பின்னரே கவுரி லட்சுமி பாய் திருவனந்தபுரம் பேரூர்க்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிந்த திருவனந்தபுர போலீசார் நகைகளை திருடியவர்கள் யார்? வெளி ஆட்களா? இல்லை அரண்மனையில் பணிபுரியும் ஊழியர்களா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதற்கட்டமாக வெளியாட்கள் யாரும் திட்டமிட்டு அரண்மனையின் உள்ளே நுழைந்து நகைகளை திருடியிருக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் நகை திருடு போனதாக சந்தேகிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை மன்னர் குடும்பத்தின் அறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் யார் யார் ஈடுபட்டார்கள்? என்பது குறித்து தகவல் சேகரித்து அவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் முடிவில் திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியவர்கள் யார்? திருடப்பட்ட நகைகள் எங்கே? உள்ளிட்ட பல்வேறு மர்மங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த பாதுகாப்பு கொண்ட மன்னர் அரண்மனையிலேயே இவ்வளவு பெரிய நகைத் திருட்டு அரங்கேறியிருப்பது கேரளாவையே அதிரவைத்துள்ளது.


