Last Updated:
கேரளாவில் 56 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பினராயி விஜயன் தர்மடம், கே.கே. ஷைலஜா பேராவூர்.
கேரளாவில் எம்எல்ஏக்களாக உள்ள 56 பேருக்கு தேர்தலில் போட்டியிட ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 86 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகப் போட்டியிடுகிறது. கேரளாவில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் தற்போது உறுப்பினர்களாக உள்ள 56 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தின் தர்மடம் தொகுதியில் களமிறங்குகிறார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, மட்டன்னூருக்குப் பதில், பேராவூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாஜக வலுவாக உள்ள நேமம் மற்றும் வட்டியூர்க்காவு போன்ற தொகுதிகளிலும் வி.சிவன்குட்டி, வி.கே.பிரசாந்த் போன்ற முக்கிய தலைவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தியுள்ளது. அதேபோல, கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 25 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், அமைச்சர்களாக உள்ள ராஜன், பிரசாத், சிஞ்சுராணி, ஜி.ஆர். அனில் ஆகியோர் அதே தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சதீசனின் பரவூர் தொகுதியில் கைப்பமங்கலம் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. டைசன் களம் இறக்கப்பட்டுள்ளார். மறுபுறம், ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிடுகிறது.


