Last Updated:
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை வைக்க பிரத்யேக வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், வாக்காளர்களின் வசதிக்காகவும் 30 புதிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை வைக்க பிரத்யேக வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களை எளிதாக அடையாளம் காண அவர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெற்று இருக்கும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வேட்பாளர்கள் தங்களின் உதவி மையங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
ECINet செயலி மூலம் வாக்காளர்கள் தங்களின் பெயர் சரிபார்ப்பு, வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளரை அறிந்து கொள்ளுதல் போன்ற 40 வகையான வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும் என்றும், சமூக வலைதளம் மூலம் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார்.
இதேபோல் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 17 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகக் கூறினார். 5 மாநிலங்களில் உள்ள 824 தொகுதிகளில் 2 லட்சத்து 19 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் சிரமத்திற்கு மத்தியில் சென்று பணியாற்ற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 8 லட்சத்து 50 ஆயிரம் காவலர்கள், துணை ராணுவ படை வீரர்கள் உட்பட மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், 20 நாடுகளின் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் தேர்தலைப் பார்வையிட வர உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் மூலம் தகுதியற்ற யாரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu

