கோலாலம்பூர் | மார்ச் 15, 2026 :
கோலாலம்பூர், ஸ்தாப்பாக் பகுதியில் உள்ள ஃபேமிலிமார்ட் பல்பொருள் அங்காடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புகுந்த இருவர், கத்திகளுடன் ஊழியர்களை மிரட்டி சுமார் 6,067 ரிங்கிட் மதிப்பிலான பணம் மற்றும் கைப்பேசிளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மார்ச் 13-ஆம் தேதி அதிகாலை சுமார் 1:59 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று, வாங்சா மாஜு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் லாசிம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கருப்பு நிற முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்த இருவர் கடைக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் கையில் வைத்திருந்த நீண்ட கத்திகளால் (Machetes) அங்கிருந்த 24 வயது மேற்பார்வையாளரை மிரட்டியுள்ளனர். உயிருக்கு அஞ்சிய மேற்பார்வையாளர் கல்லாவில் இருந்த 2,467.50 ரிங்கிட் ரொக்கப் பணத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அத்துடன், அந்த மேற்பார்வையாளரின் iPhone 15 மற்றும் மற்றொரு ஊழியரின் Redmi 15 கைப்பேசியையும் அந்தக் கும்பல் பறித்துச் சென்றுள்ளது.
கொள்ளையடித்த பிறகு இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடியுள்ளனர்.
இந்தத் துணிகரச் சம்பவம் குறித்து வாங்சா மாஜு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்:
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395/397-ன் கீழ் (கூட்டுக் கொள்ளை மற்றும் ஆயுதங்களுடன் கொள்ளையிடுதல்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள அந்த இருவரையும் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




