கோலாலம்பூர் | மார்ச் 15, 2026:
மலேசியாவில் நிலவாத முதலீட்டுத் திட்டங்களைக் காட்டி பொதுமக்களை ஏமாற்றியதாக இந்த ஆண்டு இதுவரை 1,459 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் சுமார் 188 மில்லியன் ரிங்கிட் பணத்தை இழந்துள்ளதாகக் கூட்டரசு போலீஸ் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்த இழப்புத் தொகை கடந்த ஆண்டை விடச் சற்றே குறைந்திருந்தாலும், 188 மில்லியன் ரிங்கிட் என்பது இன்னும் கவலைக்குரிய ஒன்றாகவே உள்ளது.
பொதுமக்கள் இத்தகைய மோசடி வலைகளில் சிக்காமல் இருக்க CCID பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது:
முதலீட்டுத் திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள், நாட்டின் நிதி ஆணையங்களிடம் முறையான உரிமம் மற்றும் அனுமதி பெற்றுள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அத்தோடு குறுகிய காலத்தில் அதிக லாபம் அல்லது கற்பனை செய்ய முடியாத அளவிற்குப் பெரிய வருமானம் தருவதாகக் கூறும் திட்டங்களைக் கண்டு ஏமாற வேண்டாம் என்றும், முதலீடு செய்வதற்கு முன் அந்த நிறுவனத்தின் பின்னணியைத் தீர ஆராய வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளது.
மேலும் சரிபார்க்க முடியாத தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கோ அல்லது அறிமுகமில்லாத நிறுவனக் கணக்குகளுக்கோ பணம் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
அத்தோடு உடனடியாக முதலீடு செய்யுமாறு அழுத்தம் கொடுப்பது அல்லது உணர்வுரீதியாகக் கட்டாயப்படுத்துவது போன்ற செயல்கள் மோசடிக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.




