Last Updated:
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்தியன் பிசினஸ் லீடர் விருதுகளை சிஎன்பிசி டிவி 18 குழுமம், மும்பையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் வழங்கியது. ஐசிசி தலைவர் ஜெய் ஷா, டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் சூர்யகுமார் உள்ளிட்டோருக்கு சிஎன்பிசி டிவி18 குழுமம் விருதுகளை வழங்கியது.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா, டி20 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் சூர்யகுமார் உள்ளிட்டோரை சிஎன்பிசி டிவி 18 குழுமம் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்தியன் பிசினஸ் லீடர் விருதுகளை சிஎன்பிசி டிவி 18 குழுமம், மும்பையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் வழங்கியது. விளையாட்டுத் துறையில் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை நாயகர்கள் கவுரவிக்கப்பட்டனர். விருதாளர்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைமைப் பொறுப்பை வகித்து பின்னர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உயர்ந்துள்ள ஜெய் ஷாவுக்கு விளையாட்டுத் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பிற்கான ‘Outstanding Contribution to Sports’ விருது வழங்கப்பட்டது. உலகக் கோப்பையை வென்ற அணியின் கேப்டன் சூர்யகுமாருக்கு ‘Sports Leader of the Year’ விருது வழங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பையை வென்ற அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ‘Excellence in Sports’ விருதை பியூஷ் கோயல் வழங்கிப் பாராட்டினார்.
இந்த விழாவில் பேசிய ஜெய் ஷா, விருதை நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கும், குறிப்பாக பெண் வீராங்கனைகளுக்கும் சமர்ப்பித்ததாக தெரிவித்தார். அதேபோல் கடந்த கால கிரிக்கெட்டை ஒப்பிட்டுப் பேசிய ஜெய் ஷா, “ஒரு காலத்தில் ஆஸ்திரேலியா என்றால் வெற்றி என்று எப்படி இருந்ததோ, அதேபோல் இன்று டீம் இந்தியா என்றால் வெற்றி என்று மாறியுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
மேலும், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் தொடர்பான சர்ச்சைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட அவர், “ஐசிசி தலைவராக நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எந்தவொரு அணியும் அமைப்பை விட பெரியதல்ல. ஒரு தனி அணியால் ஒரு அமைப்பு உருவாவதில்லை; அனைத்து அணிகளும் இணைந்தே அதனை உருவாக்குகின்றன” என்றார்.
இந்த உலகக் கோப்பை தொடர் 7.2 மில்லியன் நேரலை பார்வையாளர்களுடன் சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜெய் ஷா, இந்திய அணி 2028 மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தயாராக வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து “நிர்வாகியாக எனது 17 ஆண்டு அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், கீழிருந்து மேலே செல்ல பல ஆண்டுகள் ஆகும், ஆனால் மேலிருந்து கீழே விழ சில மாதங்களே போதும். எனவே, கடினமாக உழைத்து வெற்றிகளைத் தொடருங்கள்” என்று கூறி வீரர்களை ஊக்கப்படுத்தினார் ஜெய் ஷா.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


