கொழும்பு:
இலங்கையின் நிலத்தடி நீர் வரலாற்றில் இதுவரை கண்டறியப்படாத வகையில், மிக அதிகளவு நீரைத் தொடர்ச்சியாக வழங்கக்கூடிய பிரம்மாண்டமான நீரூற்று ஒன்று மாத்தறை மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
காலி – தெனியாய பிரதான வீதியில், பிட்டபெத்தர காவல் நிலையத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போதே இந்த அபூர்வ நீரூற்று தென்பட்டுள்ளது. குழாய் கிணறு அமைப்பதற்காக பாறை அடுக்குகளை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வு செய்தபோது இந்த நீர் ஆதாரம் உறுதிசெய்யப்பட்டது.


இந்த ஊற்றிலிருந்து நிமிடத்திற்கு 10,000 லீட்டர் நீர் தடையின்றி கிடைப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மன்னார், ‘மடு’ பகுதியில் கண்டறியப்பட்ட நீரூற்றே நாட்டின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரமாகக் கருதப்பட்டது. தற்போது பிட்டபெத்தர நீரூற்று அந்தச் சாதனையை முறியடித்துள்ளது.
இது குறித்துப் பேசிய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணப் புவியியலாளர் இந்திரஜித் கமகேய, “இலங்கையில் இவ்வளவு பெரிய நீர் ஊற்று கண்டறியப்படுவது இதுவே முதன்முறை. இது நாட்டின் நீர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு தேசிய வளமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.


பாறை அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளியில் தேங்கியிருக்கும் நிலத்தடி நீரை துல்லியமாகக் கண்டறிந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, இலங்கையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.




