எரிசக்தி பயன்பாட்டைக் குறைப்பதற்கும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக, தனியார் துறை ஊழியர்களிடையே ‘வீட்டிலிருந்தே வேலை’ (WFH) செய்யும் முறையை விரிவுபடுத்துவது குறித்து மனிதவள அமைச்சு ஆய்வு செய்யும். அரசாங்கத்தின் செயல்பாட்டுச் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், தாய்லாந்து போன்ற சில நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஏற்ப இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அமைச்சுகள், அரசு முகமைகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் (GLC) இந்த ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவிற்கு மனிதவள அமைச்சு தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறினார். மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல் இடையிலான பதற்றம் போன்ற புவிசார் அரசியல் சூழலால் ஏற்படக்கூடிய பொருளாதார நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கினார்.
மக்களிடம் சிக்கனத்தை எதிர்பார்ப்பதற்கு முன்னதாக, அரசாங்கம் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அரசாங்கமே சிக்கனத்தைக் கடைப்பிடிக்காதபோது, மக்களிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமற்றது என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனைத்து அமைச்சுகளும் நிறுவனங்களும் இந்த ஆண்டு திறந்த இல்ல கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். நாட்டின் நிதிநிலை மற்றும் தற்போதைய பொருளாதார தாக்கங்கள் குறித்து விவாதிக்க நாளை வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமைச்சின் தரப்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மனிதவள அமைச்சு விரிவாக ஆலோசிக்கும் என்று ரமணன் மேலும் கூறினார்.






