Last Updated:
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் இந்திய அமைச்சர் ஜெயசங்கர் பேசியது என்ன என்பது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிலவி வருகிறது. இந்நிலையில், உலக வர்த்தகத்தில் முக்கிய பாதையாக இருந்துவரும் ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழிப்பாதையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்றாலும், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களும், பல குடும்பங்களும் பெரும் இன்னல்களைச் சந்தித்துள்ளன.
இதற்கிடையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசியதாகவும், இதில் இந்திய கப்பல்களை ஹார்முஸ் வழியாக அனுமதிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது; ”இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சமீபத்தில் மூன்று முறை தொடர்புகொண்டு பேசினார். இதில், இறுதியாக மேற்கொண்ட உரையாடலில், கப்பல் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைக்கு இந்த அளவிற்கு மட்டுமே சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஈரானுடன் பேச்சு; வெளியுறவுத் துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்


