Last Updated:
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில், அன்னதானத்துக்கு சமைக்க சமையல் கலைஞர்கள் விறகு அடுப்பிற்கு மாறியுள்ளனர்.
சமையல் சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், விறகுகள் மூலம் எரியக்கூடிய ராக்கெட் அடுப்புகளுக்கு உணவக உரிமையாளர்கள் மாறியுள்ளனர். மின்சார அடுப்புகளின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
ஈரான் யுத்தம் தமிழ்நாடு வரை எதிரொலித்துள்ள நிலையில், சமையல் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவக உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாற்று வழிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில், விறகு மூலமாக எரியக்கூடிய ராக்கெட் அடுப்புகள் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விறகுகளை வைத்துச் சமைக்கக் கூடியதாக இருந்தாலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய காற்றாடியும் இதனுடன் இணைக்கப்படுவதால் இதன் பயன்பாட்டு முறை சற்று வித்தியாசமாக உள்ளது. விறகுகளை அடுப்புக்குள் செலுத்திய பிறகு இந்த அடுப்பில் பொருத்தப்பட்டுள்ள காற்றாடி வேகமாகச் சுழல்கிறது. இதன் மூலம் காற்று வேகமாக உந்தப்பட்டு வழக்கமான விறகு அடுப்புகளை விட வேகமாகவும் அடர்த்தியாகவும் தீ எரிகிறது.
ஒரு சிலிண்டருக்குச் செலவு செய்யும் தொகையில் விறகுகளை வாங்கினால் அதை வைத்து 5 மடங்கு அளவுக்கு இதில் கூடுதலாக சமைக்க முடியும் எனவும் கூறுகின்றனர். மின்சாரமும் கூட செல்போனுக்கு சார்ஜ் போடும் அளவுக்கே இதில் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். அளவுகளுக்கு ஏற்ப 1500 ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இந்த ராக்கெட் அடுப்புகள் விற்பனை செய்யப்படும் நிலையில் உணவக உரிமையாளர்கள் பலர் தேவைக்கேற்ப வாங்கிச் செல்கின்றனர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில், அன்னதானத்துக்கு சமைக்க சமையல் கலைஞர்கள் விறகு அடுப்பிற்கு மாறியுள்ளனர். இப்படி விறகு அடுப்புகளின் பக்கம் மக்கள் திரும்பியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் மின்சார அடுப்புகளை நோக்கி பொதுமக்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். அதன்படி கடந்த சில நாட்களாக மின்சார அடுப்பு, மின்சார குக்கர் போன்ற மின்சாதன பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே மின்சார அடுப்புகள் வாங்கிவைத்திருந்து பயன்படுத்தாமல் பரண்களில் போட்டுவைத்திருந்தவர்களும் தற்போது அவற்றைத் தூசு தட்டத் தொடங்கியுள்ளனர். மின்சார அடுப்புகள் மட்டுமல்லாமல் அவற்றில் வைத்துச் சமைக்கக்கூடிய பாத்திரங்களையும் ஏராளமான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
Mar 11, 2026 10:54 AM IST


