Last Updated:
பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்குப் புகலிடம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்படப் பல உலகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஈரான் நாட்டு கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுள்ள விவகாரம் உலக அளவில் பெரும் அரசியல் மற்றும் மனித உரிமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் வீராங்கனைகள், தென்கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது தங்கள் நாட்டின் தேசிய கீதத்தைப் பாட மறுத்தனர்.
ஈரானில் நிலவும் ஒடுக்குமுறைக்கு எதிராக உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வீராங்கனைகள் எடுத்த இந்தத் துணிச்சலான முடிவு, ஈரான் அரசாங்கத்தை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
ஈரான் சட்டங்களின்படி, தேசிய கீதத்தை அவமதிப்பது அல்லது அரசுக்கு எதிராகச் செயல்படுவது தேசத்துரோகமாகக் கருதப்படுகிறது. இதனால், போட்டி முடிந்து தாயகம் திரும்பினால் தங்களுக்குக் கடுமையான சிறைத் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று வீராங்கனைகள் அஞ்சினர். ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஈரான் வெளியேறிய பிறகு, ஆஸ்திரேலியாவில் அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து 7 வீராங்கனைகள் பாதுகாப்பு கருதித் தலைமறைவாகினர்.
இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்குப் புகலிடம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உட்படப் பல உலகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி புர்க் முதற்கட்டமாக 5 வீராங்கனைகளுக்குப் புகலிடம் வழங்கி உத்தரவிட்டார்.
சொந்த நாட்டுக்கு சென்றால் மரணம்? ஈரான் கால்பந்தாட்ட வீராங்கனைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியா

