Last Updated:
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை செவிலியர்கள் இருவர் புஷ்பா படத்தில் வரும், பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தங்கள் குத்தாட்ட திறமையை வெளிப்படுத்தினர்.
ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் புஷ்பா சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நேரத்தில் நோயாளிகளைக் கண்டுகொள்ளாமல் அலட்சியத்தில் ஈடுபட்ட சம்பவத்தின் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை செவிலியர்கள் மெர்சி, ஈஸ்வரி ஆகியோர் புஷ்பா படத்தில் வரும், ஊ அண்ட்டாவா பாடலுக்கு மருத்துவமனையில் குத்தாட்டம் போட்டு தங்கள் குத்தாட்ட திறமையை வெளிப்படுத்தினர். அதை மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் 16 பேர், ரசித்து வேடிக்கை பார்த்து குதூகலத்தில் ஈடுபட்டனர்.
தலைமை செவிலியர்களின் குத்தாட்ட திறமை வெளி உலகத்திற்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில், ஆட்டத்தை அழகாக படம் பிடித்து, சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்தனர். நோயாளிகள் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அலட்சியத்துடன் செவிலியர்கள் போட்ட இந்த ஆட்டம் தற்போது இவர்களை சர்ச்சையில் இழுத்துவிட்டுள்ளது.
இதனை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், குத்தாட்டம் போட்ட தலைமை செவிலியர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, வீட்டுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்தனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் 16 பேருக்கும் ஷோகாஷ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் பணி நேரத்தில் சினிமா பாடலுக்கு ஆட்டம் போடும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. அலட்சியமாக ஆட்டம் போடுவது, நோயாளிகளின் உயிருக்கே உலை வைக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அலட்சியத்துடன் இருக்கும் அரசு ஊழியர்கள் பாடமாக அமையும்.


