Last Updated:
நாட்டில் முதல்முறையாக கோமா நிலையில் உள்ள ஒருவரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் இளைஞரை கருணைக் கொலை செய்ய முதல்முறையாக உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஹரீஷ் ரானா என்ற இளைஞர், கடந்த 2013ஆம் ஆண்டு கட்டடத்தின் 4வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற ஹரீஷ் ரானாவுக்கு கடந்த 13 ஆண்டுகளாக செயற்கை சுவாசக் கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஹரீஷ் ரானாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், அவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக் வேண்டும் என அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வு, ஹரீஷ் ராணாவின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றி கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது. மேலும் வீட்டில் உள்ள ஹரீஷ் ராணாவை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து முறையான வழிமுறைகளை பின்பற்றி உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாட்டில் முதல்முறையாக கோமா நிலையில் உள்ள ஒருவரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


