கொழும்பு:
இலங்கைக் கடற்பரப்பில் ஈரானியப் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 84 கடலோடிகளின் உடல்களை ஈரானியத் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) என்ற ஈரானியப் போர்க்கப்பல் மீது, நீர்மூழ்கிக் கப்பல் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 32 மாலுமிகள் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
காலி நகரக் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, காலி தேசிய மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தவர்களின் உடல்களை ஈரானியத் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் புதன்கிழமை (மார்ச் 11) உத்தரவிட்டது.
இதற்கிடையே, இயந்திரக் கோளாறு காரணமாக இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்த மற்றொரு ஈரானியக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208 பேருக்கு 30 நாள் தற்காலிக நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, துணைத் தற்காப்பு அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பாக ஈரானியத் தூதரகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த சில நாட்களில் அவர்களிடமிருந்து விரிவான தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
முன்னதாக, ‘ஐரிஸ் லவண்’ (IRIS Lavan) என்ற மூன்றாவது ஈரானியப் போர்க்கப்பல் 183 பேருடன் இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களால், உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், கடல்சார் வர்த்தகமும் போக்குவரத்தும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.




