Last Updated:
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே சிலிண்டர்களை வழங்குவதில் 100 சதவீதம் முன்னுரிமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்க அதிரடி நடவடிக்கையாக அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு விநியோக ஒழுங்குமுறை ஆணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
பொதுமக்களுக்கு தேவையான முக்கிய பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விலை மற்றும் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்துக்குள் எரிவாயு சிலிண்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளும் எல்.பி.ஜி (LPG) உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்.பி.ஜி தயாரிக்க பயன்படும் புரோப்பேன், பியூட்டேன் ஆகியவற்றை பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகளுக்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் சமையல் எரிவாயுவை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation), பாரத் பெட்ரோலியம் (Bharat Petroleum), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிலிண்டர்களை, வீட்டு சமையல் பயன்பாட்டிற்கே 100 சதவீதம் முன்னுரிமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும், உரத் தொழிற்சாலைகளுக்கு அவற்றின் கடந்த 6 மாத சராசரி நுகர்வில் 70% எரிவாயு உறுதி செய்யப்படும் என்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் மற்றும் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட இதர உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு 80% எரிவாயு விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை.. இனி வீட்டு உபயோக விநியோகத்துக்கு முன்னுரிமை


