மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தனது வழக்கமான விமான சேவைகளை, ரியாத் மற்றும் டுபாய் ஆகிய நகரங்களுக்கு மீண்டும் நாளாந்தம் முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விமான பயண விபரங்கள்:
- ரியாத் (சவூதி அரேபியா): திங்கட்கிழமை (09) இரவு முதல் நாளாந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன.
- டுபாய் (ஐக்கிய அரபு அமீரகம்): செவ்வாய்க்கிழமை (10) முதல் நாளாந்த விமான சேவைகள் வழமை போல் இயக்கப்படும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரங்களை தமது அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கே தாம் முதலிடம் வழங்குவதாகவும், சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாகவே இந்த சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாகவும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணி நிமித்தம் மற்றும் வர்த்தக நிமித்தம் செல்லும் இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய இந்த வழமை நிலை பொருளாதார ரீதியாகவும் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
பயணங்கள் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் நேர மாற்றங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உத்தியோகபூர்வ இணையதளத்தில் www.srilankan.com பயணிகள் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

