Last Updated:
நேற்று ஒரே நாளில் சுமார் 67 ஆயிரம் இந்தியர்கள் ஈரான் எல்லையை கடந்து விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபடக் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 28 ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வு கடந்த மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்கு நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரான்
இதனை தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஈரான் போர் சூழலில், கச்சா எண்ணெய் கையிருப்பு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று ஒரே நாளில் சுமார் 67 ஆயிரம் இந்தியர்கள் ஈரான் எல்லையை கடந்து விட்டதாகவும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
ஈரானில் சிக்கியுள்ளவர்கள் ஆர்மீனியா வழியா இந்தியா திரும்ப இருப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். மேலும் ஈரான் போரில் இந்தியாவை சேர்ந்த 2 மாலுமிகள் உயிரிழந்து விட்டதாகவும், ஒருவரை காணவில்லை என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


